புத்தரின் சிற்ப வடிவம்




புத்தரது உருவங்கள் பௌத்த குட வரைகளிலும், சைத்தியங்களிலும், தனி சிற்பங்களாகக் காண முடிந்தது. புத்தரின் உருவம் நின்ற நிலையிலோ, (Sthanaka Standing), அமர்ந்த நிலையிலோ, (Asana
- Seated) கிடந்த நிலையிலோ (Sayana- recumbent) வடிவமைக்கப்பட்டன.
நின்ற நிலையிலுள்ள புத்தர் தன் உடல் முழுவதும் அங்கியால் போர்த்தப்பட்டு, ஒரு கையைத் தொங்கவிட்டு மறு கையில் அபயம் ஹஸ்தம் காட்டி நிற்பார் (இடது கை அல்லது வலது கை ஆசீர்வாதம் செய்வது போல்).
அமர்ந்த நிலையில், பொதுவாக தாமரையில் அமர்ந்திருப்பார். இரு கால்கள் குறுக்காக மடக்கி வைத்திருப்பார். கண்கள் பாதியளவு மூடியிருக்கும், மூக்கின் நுனியைப் பார்த்துக் கொண்டிருக்கும், காதுகள் துளையிட்டு நீண்டு இருக்கும். மூக்கில் மேல் தடிப்பு காணப்படும். தலைமுடி, சுருள் சுருளாக முடிக்கப்பட்டிருக்கும் அதன் மேல் ஒரு ஞான முடிச்சி (ஒளி வட்டம்) தென்படும். உடல் முழுக்க ஆடையால் போர்த்தப்பட்டிருக்கும் (அங்க வஸ்திரம்).
கிடந்த நிலையில், புத்தரின் பரிநிர்வாணத்தை காட்சிச் சிற்பமாகக் காட்டப்பட்டுள்ளது. புத்தர் படுத்துக்கொண்டு, ஒரு பக்கம் சாய்ந்து, தனது வலது கையை மடக்கித் தலைக்குக் கீழ் தலை யணையில் வைத்திருப்பார். அவரது முகத்தில் கருணையும், அமைதியும் ஒன்று சேர்ந்தது போல் காட்டப்பட்டிருக்கும்.
முத்திரைகள், புத்தர் கரங்களின் முத்திரைகளோடு (mudras) சித்திரிக்கப்படுகிறார். ஒவ்வொரு கரத்தின் முத்திரையும் பொருளுடையது. பௌத்தத்தில் பல தெய்வங்கள் பல்வேறு வகைகளான கரங்களின் முத்திரைகளோடு சித்திரிக்கப்படுகிறார்கள். முத்திரை பட்டியல் மிகவும் நீளமானது. அதில் சிறப்பாக ஆறு முத்திரைகள் புத்தரைச் சித்திரிப்பதற்காகவே தொடர்ந்து கையாளப்படுகின்றன.
(1)          தியான முத்திரை - தியான சமாதியில் ஆழ்ந்து திளைத்திருக்கும். தத்துவார்த்தமாக, மெய் ஞானப் பேற்றினை அடைந்திருப்பதை இந்த முத்திரை குறிக்கின்றது.
(2)          வரத முத்திரை- இந்த முத்திரை தானத்தையும், தாராள மனத்தையும் குறிக்கின்றது. வேண்டிய வரம் அல்லது நல்லாசி இதன் மூலம் வழங்கப்படுகிறது.
(3)          அபய முத்திரை           -பயமின்மையைக் குறிக்கின்றது. (பயம், அச்சம், கவலை, திகில், இடர் தவிர்த்தல்)
(4)          விதர்க்க முத்திரை-அறிவு பூர்வமாக ஆராய்ந்து விளக்குதல்
(5)          தர்மச் சக்கர முத்திரை-சரியாகக் கூறின் தர்மச் சக்கரப் பரிவர்த்தன முத்திரை சாரநாத்தில் புத்தரின் முதல் பேரூரை விளக்குதல்
(6)          பூமிஸ் பர்ச முத்திரை-எதற்கும் கலங்காத மன உறுதியைக் குறிக்கின்றது.


கருத்துகள்